இந்தியாவில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் மினி இஸ்ரேல் கிராமம்

இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவிற்கு அருகில் அமைந்துள்ள தர்மகோட் என்ற கிராமம் ‘இந்தியாவின் மினி இஸ்ரேல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு இந்தியர்களை விட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ மூலம் இந்த கிராமத்தின் தனித்துவமான வாழ்க்கை முறை உலகிற்கு தெரியவந்துள்ளது. இங்கு வருபவர்கள் சில நாட்கள் தங்குவதோடு மட்டுமல்லாமல் மாதக்கணக்கில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை கிராமத்திற்கு குறிப்பாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அமைதியான சூழல் மற்றும் இதமான வானிலை காரணமாக அவர்கள் இங்கேயே தங்கி தங்கள் நாட்களை கழிக்க விரும்புகின்றனர். உள்ளூர் மக்களை விட வெளிநாட்டினரே தெருக்களில் அதிகம் தென்படும் இந்த கிராமம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் ஒரு வெளிநாட்டு மண்ணில் இருப்பது போன்ற உணர்வை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது.