நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடி மாற்றம் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. விஜய் ஹசாரே கோப்பையின் ஆட்டங்களை ஆய்வு செய்த பிறகு, ஜனவரி 2 முதல் 4 தேதிகளுக்குள் அணி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. காயத்திலிருந்து குணமடைந்துள்ள சுப்மன் கில் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவர் இடத்தை இழக்க நேரிடும். எனினும் ஸ்ரேயாஸ் ஐயர் திரும்புவது சந்தேகமே.
விக்கெட் கீப்பர் வரிசையில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இஷான் கிஷன் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால் இஷான் கிஷனுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். ஜனவரி 11 முதல் தொடங்கும் இத்தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் களம் காண உள்ளனர். முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.