திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான பிளேடுகளை தானமாக வழங்கிய தொழிலதிபர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஸ்ரீதர் என்பவர் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு 1.02 கோடி ரூபாய் மதிப்பிலான பிளேடுகளை தானமாக வழங்கியுள்ளார். திருப்பதியில் ஆண்டு முழுவதும் நடைபெறும் ‘கல்யாண கட்டா’ எனப்படும் தலைமுடி காணிக்கை செலுத்தும் சடங்கிற்காக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடி காணிக்கை அளிக்கும் போது இந்த பிளேடுகள் பயன்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி சராசரியாக 40,000 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக ஆண்டுக்கு சுமார் 1.1 கோடி ரூபாய் மதிப்பிலான பிளேடுகள் தேவைப்படுகின்றன. ஸ்ரீதரின் இந்த மிகப்பெரிய பங்களிப்பு அடுத்த ஒரு வருடத்திற்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். இச்சடங்கை தடையின்றி மேற்கொள்ள ஆயிரக்கணக்கான சவரத் தொழிலாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.