வங்கதேசத்தில் இந்து தொழிலாளி கொடூரக் கொலை அமெரிக்காவின் கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை

வங்கதேசத்தில் அண்மையில் நடந்த வன்முறையில் இரண்டு இந்து இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தீபு சந்திர தாஸ் என்ற இந்து ஆடைத் தொழிலாளி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் ‘பயங்கரமானது’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய மத வெறுப்புணர்வை நிபந்தனையின்றி அமெரிக்கா கண்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா மத சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமையை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது. சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் வங்கதேச இடைக்கால அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றாலும் இச்சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.