திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தொழிலதிபர் வழங்கிய 1 கோடி மதிப்பிலான பிளேடுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி. ஸ்ரீதர் என்பவர் 1.02 கோடி ரூபாய் மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் நடைபெறும் ‘கல்யாண கட்டா’ எனப்படும் தலைமுடி காணிக்கை செலுத்தும் சடங்கிற்காக இந்த பிளேடுகள் பயன்படுத்தப்படும். பக்தர்களின் நலன் வேண்டி செய்யப்படும் இந்த மொட்டை அடிக்கும் சடங்கிற்கு இந்த தானம் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிடி தலைவர் பி.ஆர். நாயுடு கூறுகையில், மொட்டை அடிக்கும் சடங்கிற்காக ஆண்டுக்கு சுமார் 1.1 கோடி பிளேடுகள் தேவைப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 40,000 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். தொழிலதிபர் ஸ்ரீதரின் இந்த பங்களிப்பு அடுத்த ஒரு வருடத்திற்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும். இந்த பணிக்காக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கோவிலில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.