ஐபிஎல் ஏலத்திற்கு பின் ப்ரீத்தி ஜிந்தாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆஸ்திரேலிய வீரரின் அதிரடி ஆட்டம்

ஐபிஎல் 2026 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கூப்பர் கானோலி, தற்போது பிக் பேஷ் லீக் தொடரில் அதிரடி காட்டி வருகிறார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். ஏலம் முடிந்த கையோடு கானோலி காட்டிய இந்த விஸ்வரூபம் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதே போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஃபின் ஆலனும் 38 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து மிரட்டினார். இருப்பினும், தொடர்ச்சியாக அதிரடி காட்டி வரும் கானோலியின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த போட்டியிலும் 59 ரன்கள் எடுத்த அவர், தற்போது டி20 கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இவரது இடதுகை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறன் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.