ஜெர்மனியில் 9 ஆண்டுகள் இருந்தும் இந்திய பாஸ்போர்ட்டை விடாதது ஏன்? தொழிலதிபரின் உருக்கமான பதிவு

வெளிநாட்டு குடியுரிமை கிடைத்தால் போதும் என்று பலர் துடிக்கும் நிலையில், ஜெர்மனியில் 9 ஆண்டுகளாக வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் மயூக் பாஞ்சா தனது தேசப்பற்றை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு ஏஐ நிறுவனம் நடத்தி வரும் இவர், ஜெர்மனி குடியுரிமை பெற தகுதியுடையவராக இருந்தும் அதை வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஜெர்மனியை மதிப்பதாகவும் ஆனால் அதன் கலாச்சாரத்தோடு தன்னால் முழுமையாக இணைய முடியவில்லை என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
தன்னுடைய இந்திய பாஸ்போர்ட் என்பது வெறும் காகிதம் அல்ல, அது இந்தியர்களின் பல தலைமுறை போராட்டத்தின் சின்னம் என்று மயூக் கருதுகிறார். புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்கும் போது அந்த நாட்டின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற வேண்டும், அதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு குடிமகனாக உரிமை கோரும் அதிகாரம் தமக்கு இருப்பதாகக் கூறிய மயூக், தனது வேர்களைத் துறக்கத் தயாராக இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.