அணுசக்தி துறையில் தனியார்மயம் பேராபத்து சாந்தி மசோதாவிற்கு சசி தரூர் கடும் எதிர்ப்பு

மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள ‘சாந்தி’ (SHANTI) மசோதாவிற்கு மக்களவையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்தார். அணுசக்தி துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் எச்சரித்தார். விபத்து காலங்களில் இழப்பீடு வழங்கும் வரம்பு மிகவும் குறைவாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கதிர்வீச்சு பாதிப்புகள் பல ஆண்டுகளுக்குப் பிறகே தெரியும் நிலையில், இழப்பீடு கோருவதற்கான காலக்கெடு மிகவும் சுருக்கமாக உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக புகார் அளிக்க முடியாத வகையில் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முறையான பாதுகாப்பு ஆய்வுகள் இல்லாத இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று தரூர் வலியுறுத்தினார்.