காதலனிடம் குழந்தை கேட்ட அங்கன்வாடி ஊழியர்; கணவன், மனைவி சேர்ந்து நடத்திய பயங்கரக் கொலை!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லக்ஷ்மண்பூர் பகுதியில், அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான தனது காதலன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், அந்தக் காதலனும், அவனது மனைவியும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மோஹித் யாதவ் மற்றும் அவரது மனைவி அஞ்சலி சவுகான் ஆகியோரை காவல்துறை 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளது.
காவல்துறையின் விசாரணையில், பால் வாங்கும் போது மோஹித் யாதவ் இறந்த அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. குழந்தை இல்லாத அந்தப் பெண், மோஹித் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டவே, மோஹித் தனது மனைவி அஞ்சலியிடம் உண்மையைச் சொன்னார். இதையடுத்து, இருவரும் இணைந்து அந்தப் பெண்ணை கொலை செய்யத் திட்டமிட்டு, டிசம்பர் 11ஆம் தேதி கல் மற்றும் ஸ்டீல் டிரம்மால் தாக்கி அவரைக் கொன்றனர். கொலைக்குப் பிறகு நகைகள், பணத்துடன் தப்பிக்க முயன்ற இருவரையும் காவல்துறை கைது செய்தது.