அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு நெருக்கடி: இந்தியா மீதான 50% வரி நீக்கக் கோரிக்கை

இந்தியாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது. வரி விதிப்புக் கொள்கை காரணமாக, டிரம்ப் தனது சொந்த நாட்டிலேயே கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறார். பிரதிநிதிகள் சபையின் மூன்று ஜனநாயகக் கட்சியினர்— டெப்ரா ராஸ் (வடக்கு கரோலினா), மார்க் வீசி (டெக்சாஸ்) மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (இல்லினாய்ஸ்)— இணைந்து ஒரு தீர்மானத்தை முன்வைத்துள்ளனர். இந்த வரியை நீக்குவதற்காக, விதிக்கப்பட்ட “தேசிய அவசரகால பிரகடனத்தை” உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த 50 சதவீத வரி சட்டவிரோதமானது, அமெரிக்க நலன்களுக்கு எதிரானது மற்றும் சாதாரண அமெரிக்கர்களைப் பெரிதும் பாதிக்கிறது என்று மூவரும் தெரிவித்துள்ளனர். இந்த வரியினால் விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். வரியை நீக்குவதன் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.