3 வயது குழந்தையுடன் திடீர் என்ட்ரி! மாண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டாவது திருமணம்

பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது, 3 வயது குழந்தையுடன் ஒரு இளம்பெண் திடீரென உள்ளே நுழைந்தார். அந்த மணமகன் தன் சட்டப்பூர்வமான கணவர் என்றும், 5-6 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் நீதிமன்றத் திருமணம் நடந்ததாகவும் அவர் சத்தமாகக் கூறி, இரண்டாவது திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். உடனடியாக போலீஸ் உதவி எண் 112-க்கு அழைப்பு விடுத்ததால், கல்யாண மண்டபத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது, விழா நிறுத்தப்பட்டது.
தன்னையும் குழந்தையையும் விட்டுவிட்டு விவாகரத்து இல்லாமல் தன் கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் இதை மறுத்து, தாங்கள் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட வந்ததாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்து மோகா சதர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மணமகனையோ மணமகளையோ காணவில்லை. அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.