பாகிஸ்தானுக்கு நிம்மதி: திவால் ஆவதைத் தவிர்க்க IMF $1.2 பில்லியன் கடனுக்கு ஒப்புதல்

ஆழமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாய்க்கிழமை $1.2 பில்லியன் கடனை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், இந்தத் தொகை பாகிஸ்தானின் பொருளாதாரத்தை ஓரளவுக்குக் காப்பாற்றும் என்று கருதப்படுகிறது. இரண்டு வெற்றிகரமான ஆய்வுகளை முடித்த பின்னர் IMF இந்தக் கடனை அங்கீகரித்துள்ளது. இதில் $1 பில்லியன் டாலர் அதன் முக்கிய கடன் திட்டத்திலிருந்தும், மீதமுள்ள $200 மில்லியன் டாலர் காலநிலை தொடர்பான ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழும் வழங்கப்படவுள்ளது.
இந்த முடிவு அரசின் கடினமான பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் கடந்த ஆண்டு நாடு திவால் ஆவதிலிருந்து தப்பியது என்று அவர் கூறியுள்ளார். நிலைத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்ல இன்னும் பெரிய சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிர் மற்றும் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் ஆகியோரின் முயற்சிகளையும் பாராட்டினார்.