8வது ஊதியக்குழு எப்போது அமல்? ஜனவரி 1, 2026 முதல் கிடைக்குமா, பாராளுமன்றத்தில் அரசு கூறியது என்ன

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக்குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டு, அதன் விதிமுறைகள் (ToR) நவம்பர் 3, 2025 அன்று நிதி அமைச்சகத்தின் தீர்மானம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க, அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பரிந்துரைகள் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது.
கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 8) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, 8வது மத்திய ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கான குறிப்பிட்ட தேதியை அரசு இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். எனினும், ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 2026-2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை முறையே 50.14 லட்சம் மற்றும் சுமார் 69 லட்சம்.