இபிஎஃப்ஓ (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு மாபெரும் மகிழ்ச்சி செய்தி! வட்டி விகிதம் உயர்ந்து ₹52,000 வரை கிடைக்க வாய்ப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்த நிதி ஆண்டு 2025-26-க்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, சந்தாதாரர்கள் மத்தியில் இந்த ஆண்டு வட்டி விகிதம் 8.75% ஆக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.2% வட்டி விகிதத்தை விட அதிகமாகும். மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், ஜனவரி மாதத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதத்தில் ஏற்படக்கூடிய இந்த உயர்வு பிஎஃப் (PF) இருப்பை நேரடியாக பாதிக்கும். கணக்கீடுகளின்படி, ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் ₹6 லட்சம் இருப்பு இருந்தால், 8.75% வட்டி விகிதத்தில் சுமார் ₹50,000 முதல் ₹52,000 வரை வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல், ₹5 லட்சம் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு சுமார் ₹42,000 வரை வட்டி கிடைக்கலாம். நாடு முழுவதும் உள்ள சுமார் 8 கோடி பிஎஃப் சந்தாதாரர்கள், இபிஎஃப்ஓ-வின் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) வரவிருக்கும் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.