டாட்டா டெலி சர்வீசஸ் பங்குகள் திடீர் வீழ்ச்சி ரூ. 50-க்கு கீழ் சரிந்தது ஏன்?

டாட்டா குழுமத்தின் டாட்டா டெலி சர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் (TTML) பங்குகள் சமீபத்தில் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. சந்தையில் ஏற்றம் இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை TTML பங்கு விலை ரூ. 50-க்கு கீழே சரிந்து, அதன் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த நிலையைத் தொட்டது. இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், வாடிக்கையாளர் சரிபார்ப்பு (KYC) மற்றும் உரிம விதிமுறைகளை மீறியதற்காக தொலைத்தொடர்புத் துறையால் (மகாராஷ்டிரா LSA) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட இரண்டு பெரிய அபராதங்கள் ஆகும். ஏப்ரல் 2007 முதல் ஏப்ரல் 2012 வரையிலான காலகட்டத்திற்காக மொத்தம் ரூ. 4.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத உத்தரவுகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், மேல்முறையீடு உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகளை விரைவில் பரிசீலிக்க இருப்பதாகவும் TTML, பம்பாய் பங்குச் சந்தையிடம் (BSE) தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்ட அபராதங்களில் ஒன்று ரூ. 29.32 லட்சம், மற்றொன்று ரூ. 4.39 கோடி ஆகும். எனினும், நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் உடனடியாக பெரிய தாக்கம் எதுவும் இருக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு காலத்தில் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது, ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பங்குகளின் வருமானம் எதிர்மறையாகவே உள்ளது.