குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7,500 இல்லை EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் பின்னடைவு

ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹1,000 இலிருந்து ₹7,500 ஆக உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த தொகையை உயர்த்துமாறு நீண்ட நாட்களாக ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே, சிவசேனா (யுபிடி) எம்.பி.யின் கேள்விக்குப் பதிலளிக்கையில், இபிஎஸ்-95 நிதியின் தற்போதைய நிதி நிலைமை வலுவாக இல்லை என்று குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டில் இந்த நிதியில் கடுமையான ‘ஆக்சுவரியல்’ பற்றாக்குறை கண்டறியப்பட்டுள்ளது, இது பெரியளவிலான ஓய்வூதிய உயர்வுக்கு அனுமதி அளிக்கவில்லை. இபிஎஸ்-95 என்பது ஒரு குறிப்பிட்ட பங்களிப்பு மற்றும் குறிப்பிட்ட பலன் திட்டம் என்பதால், அனைத்து ஓய்வூதியங்களும் குவிக்கப்பட்ட நிதியில் இருந்தே வழங்கப்படுகின்றன. நிதியில் உள்ள இந்த பற்றாக்குறையின் காரணமாக, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹7,500 ஆக உயர்த்துவது நடைமுறைக்கு உகந்ததல்ல என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.