இந்தியாவின் தற்காப்பு வியூகத்தில் திருப்புமுனை! எஞ்சின் மற்றும் ரஃபேல் தொழில்நுட்பத்திற்காக பிரான்ஸ்-ரஷ்யாவை நாடும் புதுடெல்லி

இந்தியாவின் உள்நாட்டு விமானத் தயாரிப்புத் திட்டத்திற்கு அமெரிக்காவின் எஞ்சின் விநியோகத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தாமதங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. தேஜாஸ் மார்க்-1ஏ மற்றும் மார்க்-2 திட்டங்களுக்குத் தேவையான ஜிஇ-414 எஞ்சின்களை அமெரிக்கா வழங்குவதில் காட்டும் தயக்கத்தால், தேஜாஸ் திட்டத்தின் இலக்கு 2025-லிருந்து 2030 வரை தாமதமாகலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில், தொழில்நுட்பத்தின் முழுமையான பரிமாற்றம் (Transfer of Technology- ToT) மற்றும் உள்நாட்டு உற்பத்தித் திறனை உறுதி செய்வதற்காக இந்தியா தனது தற்காப்பு கூட்டாண்மையில் மாற்றம் செய்து பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவை நாடத் தொடங்கியுள்ளது.
இந்த முக்கிய பின்னணியில், ரஃபேல் போர் விமானத்தின் எம்88 (M88) எஞ்சினை உற்பத்தி மற்றும் பராமரிப்பு செய்வதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை இந்தியா பிரான்சுடன் இறுதி செய்யவுள்ளது. இதன் மூலம் 100% தொழில்நுட்பப் பரிமாற்றத்துடன் எஞ்சின்கள் நாட்டிலேயே தயாரிக்கப்படும். மேலும், ரஃபேல் தயாரிப்பாளரான டசால்ட் ஏவியேஷனுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 533 ஆர்டர்கள் கிடைத்துள்ளன. மறுபுறம், ரஷ்யா தனது அதிநவீன எஸ்யூ-57 விமானத்தின் முழுமையான தொழில்நுட்பத்தையும் அளிப்பதோடு, எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் படைப்பிரிவுகளையும் இந்தியாவுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் தற்காப்புத் துறையை தன்னிறைவு அடையச் செய்ய உதவும்.