IRCTC முறைகேடு வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரி ராப்ரி தேவி மனு; சிபிஐ-யிடம் டெல்லி நீதிமன்றம் பதில் கோரியது

தில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில், IRCTC முறைகேடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி விஷால் கோக்னே-விடமிருந்து வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக்கோரி பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) இன்று (புதன்கிழமை) நீதிமன்றம் பதிலைக் கோரியது. முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி தினேஷ் பட், சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பி டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் நீதிபதி பாரபட்சமான மனப்பான்மையுடன் வழக்குகளை விசாரிப்பதாக ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிபதி தொடர்ந்து வழக்குகளில் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதால், நியாயம் மற்றும் சமமான விசாரணையின் நலன் கருதி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ராப்ரி தேவி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். முதலில், ராப்ரி தேவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகளை மாற்றக் கோரி விண்ணப்பித்திருந்தாலும், தற்போது நீதிமன்றம் IRCTC முறைகேடு வழக்கு தொடர்பாக மட்டுமே சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.