3 காதலிகளுக்காக சொகுசு செலவு: ஆக்ராவில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு சிறை! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா, நேரு என்கிளேவ் பகுதியில் ஒரு தொழிலதிபரின் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மகேந்திர பால் வர்மா என்பவரது வீட்டிற்குள் நுழைந்த இருவர், குடும்பப் பெண்களைத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் உதவியுடன் இரு கொள்ளையர்களும் பிடிபட்டனர். இந்தத் தாக்குதலில் தொழிலதிபரின் மருமகள் பூனம் படுகாயமடைந்துள்ளார், அவரது தலையில் 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. பிடிபட்ட இருவரான விஷால் மற்றும் அமன் ஆகியோர் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையில், முக்கிய குற்றவாளியான விஷாலின் ஆடம்பரச் செலவுகளுக்காகவே இந்தக் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது. விஷாலுக்கு மூன்று காதலிகள் இருப்பதாகவும், அவர்களின் செலவுகளைச் சமாளிக்க அதிக பணம் தேவைப்பட்டதாகவும் போலீசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளான். சொகுசு வாழ்க்கைக்காக வேலையை விட்டுவிட்டு, பணத்திற்காக திருட்டு வழியைத் தேர்ந்தெடுத்ததாக அவன் ஒப்புக்கொண்டான். ஏற்கனவே ஐந்து முறை சிறை சென்றுள்ள விஷால், தனது நண்பன் அமனுக்கு மது கொடுத்து ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி கூட்டாளியாக சேர்த்துள்ளான். விஷாலின் ஜாமீனை ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.