போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியா வந்தடைந்தது மாபெரும் எல்பிஜி கப்பல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலுக்கு இடையே இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் வகையில் 42 ஆயிரம் மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவுடன் ‘ஜக் வசந்த்’ கப்பல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது. கடல் நடுவிலேயே எரிவாயுவை மாற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இந்த எரிவாயு விரைவாக இறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் எவ்வித தடையுமின்றி சீராக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பெட்ரோலிய அமைச்சகம், நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் ஒரு மாதத்திற்கான எல்பிஜி இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.