ஈரான் அணுமின் நிலையம் மீதான தாக்குதலால் அணுசக்தி விபத்து ஏற்படும் அபாயம்

ஈரானின் புஷெஹ்ர் அணுமின் நிலையம் மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அணுசக்தி தளங்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தும் என அதன் தலைவர் ரஃபேல் குரோஸி கவலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போதைக்கு அணுமின் நிலையத்திற்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரைத் தாக்கியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். அணுசக்திப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய IAEA ஈரான் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தற்போதைய இராணுவ பதற்றம் அணுசக்தி மற்றும் தொழில்முறை சார் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.