AI-ஆல் பொறியாளர்களின் வேலைக்கு ஆபத்தா? முன்னணி IT நிறுவனங்கள் தரும் நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பொறியாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய விளக்கம் அளித்துள்ளன. AI வேலைகளை நீக்காது, மாறாக, வேலை செய்யும் முறையை மாற்றியமைக்கும் என அவை உறுதியளிக்கின்றன. பொறியாளர்கள், பாரம்பரியமான கோடிங் பணிகளில் இருந்து விடுபட்டு, தற்போது அதிக உத்தி சார்ந்த மற்றும் அறிவுசார்ந்த பணிகளில் ஈடுபட வேண்டும்.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் அசென்ச்சர் போன்ற நிறுவனங்கள், பொறியாளர்கள் இனி ‘எப்படி’ ஒரு வேலையைச் செய்வது என்பதை மட்டும் அல்ல, ‘ஏன்’ மற்றும் ‘எந்த’ வேலையைச் செய்ய வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று கூறுகின்றன. இந்த மாற்றத்தை, ஒரு கொத்தனார் கட்டிடக் கலைஞராக மாறுவதற்கு வல்லுநர்கள் ஒப்பிடுகிறார்கள். அதாவது, AI பொறியாளர்களின் வேலைகளைப் பறிக்காது, மாறாக அவர்களின் திறன்களை மேலும் மேம்படுத்தும்.