11 மாதங்களில் இல்லாத உச்சம்: ரஷ்யாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி!

கடந்த ஜூன் மாதம் ரஷ்யாவிலிருந்து இந்தியா ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது, இது கடந்த 11 மாதங்களில் இல்லாத உச்சம் ஆகும்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. அதிலிருந்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் பிரதானமாக இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் தவிர்த்தன.
இதனைத் தொடர்ந்து அதிக தள்ளுபடியில் கச்சா எண்ணெய்யை விற்க ரஷ்யா முன்வந்தது. இந்த வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தற்போது ரஷ்யாவின் பங்கு சுமார் 40 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், உலகளாவிய வர்த்தக சரக்குகள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கெப்லரின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகான 11 மாதங்களில் இல்லாத உச்சமாகும்.
இந்தியாவுக்கு கடந்த ஜூனில் ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய்யை அதிக அளவு ஏற்றுமதி செய்த முதல் 5 நாடுகள் (கெப்லர் தரவுகளின்படி):
ரஷ்யா – 20.80 லட்சம் பீப்பாய்கள்
ஈராக் – 8.93 லட்சம் பீப்பாய்கள்
சவூதி அரேபியா – 5.81 லட்சம் பீப்பாய்கள்
ஐக்கிய அரபு அமீரகம் – 4.90 லட்சம் பீப்பாய்கள்
அமெரிக்கா – 3.03 லட்சம் பீப்பாய்கள்