ஷேக் ஹசீனாவின் அரசியல் மீட்சி உறுதியா? டாக்காவில் உளவுத்துறை அறிக்கை பரபரப்பு

டாக்காவில் நடந்த உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில், வங்கதேசத்தின் அரசியல் நிலைமை குறித்து புதிய யூகங்கள் கிளம்பியுள்ளன. உளவுத்துறை அறிக்கையின்படி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. முன்பு இருந்த மக்கள் கோபம் இப்போது வெகுவாக குறைந்துள்ளது. உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளை இனி எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது என மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அக்கட்சியின் தொண்டர்கள் மீண்டும் வீதிகளில் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்துகின்றனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் கூறுகையில், மக்கள் மத்தியில் மனநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவாமி லீக் நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் பங்கேற்கின்றனர், இதனால் காவல்துறை மற்றும் உளவுத்துறைக்கு சரியான நேரத்தில் தகவல்கள் கிடைப்பதில்லை. கைது செய்யப்பட்ட பல அவாமி லீக் உறுப்பினர்கள் பலவீனமான போலீஸ் அறிக்கைகள் காரணமாக விடுவிக்கப்படுவதாக உள்துறை ஆலோசகர் கவலை தெரிவித்தார். அவாமி லீக் கட்சியின் வீதிப் போராட்டங்கள் அதிகரித்து வருவதாக தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.