யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் பருப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா? எவை பாதுகாப்பானவை தெரியுமா?

செய்திப் பிரிவு : யூரிக் ஆசிட் அளவு அதிகரித்தால் பருப்பு வகைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டுமா? மூட்டு வலி வந்துவிடுமோ என்ற பயத்தில் பலரும் பருப்பை உணவில் சேர்ப்பதே இல்லை. ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி எல்லா பருப்பு வகைகளும் ஆபத்தானவை அல்ல; சரியான பருப்பைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம். இந்தத் தவறான புரிதலால் சாமானிய மக்கள் தங்களுக்குத் தேவையான புரதச் சத்தை இழக்க நேரிடுகிறது.
மஞ்சள் பாசிப்பருப்பில் பியூரின் குறைவாக இருப்பதால், அதைத் தினமும் தாராளமாகச் சாப்பிடலாம். துவரம்பருப்பு அல்லது பச்சைப்பயறு வகைகளை வாரத்தில் மூன்று நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் சமைப்பதற்கு முன் ஆறு மணிநேரம் ஊறவைப்பது அவசியம். அதேசமயம் சோயாபீன்ஸ் மற்றும் ராஜ்மா போன்ற அதிக பியூரின் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் உடலின் யூரிக் ஆசிட் அளவைப் பொறுத்து சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.