சமையல் எரிவாயு தட்டுப்பாடு மோடி அரசை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி

நாட்டில் நிலவும் கடும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். போதுமான இருப்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு, 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ய தடை விதிப்பது மற்றும் வணிக சிலிண்டர் விற்பனையை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மக்களைத் துன்புறுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் சூழலை உணர்ந்து ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிவாயு இருப்பு வைக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் அவதி குறித்து கவலை தெரிவித்த முதல்வர், உடனடியாக உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பதுக்கலைத் தடுக்க தலைமைச் செயலாளர் மற்றும் தொழில் துறைச் செயலாளருக்கு சிறப்புப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நோடல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்ட அவர், நிலைமையைச் சமாளிக்க மாவட்ட ஆட்சியர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் கறுப்புச் சந்தை அதிகரிப்பதாகக் கூறி அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.