சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் வானதி சீனிவாசன் அதிரடி கோரிக்கை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை கடிதம் எழுதியதாகக் கூறப்படும் தகவல் குறித்து தமக்குத் தெரியாது என அவர் விளக்கமளித்தார்.
கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது தொகுதிகள் கிடைப்பதில் சில சவால்கள் இருந்தாலும், ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக வானதி கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைச் சாடிய அவர், தன்னை நம்பியிருந்த தொண்டர்களைக் கைவிட்டுவிட்டு கமல்ஹாசன் மட்டும் எம்.பி. ஆகிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அண்ணாமலையின் தேர்தல் நிலைப்பாடு குறித்த வானதியின் இந்த கருத்து தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.