குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம் மீறினால் சிறை தண்டனை நிச்சயம்

உத்தரகாண்டைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை (UCC) நிறைவேற்றிய நாட்டின் இரண்டாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது. சட்டப்பேரவையில் சுமார் 7 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின்படி, மதம் கடந்து திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியான சட்ட நடைமுறை பின்பற்றப்படும். இனி திருமணமான 60 நாட்களுக்குள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; தவறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், லிவ்-இன் உறவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்பது இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ திருமணம் செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் தலையிடுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெடாவாலா குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், பழங்குடியின மக்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் குஜராத்திகளுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும் என முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.