ஈரான் அணுமின் நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி

ஈரானின் புஷெஹ்ர் அணுமின் நிலைய வளாகத்தில் ஏவுகணை விழுந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அதன் தலைவர் ரஃபேல் க்ரோஸி, அணுமின் நிலையத்திற்கு ஏற்படும் பாதிப்பு ஈரான் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பாரிய கதிர்வீச்சு விபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
இந்த தாக்குதலில் அணுமின் நிலையத்திற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணுமின் நிலையம் வழக்கம் போல் இயங்கி வந்தாலும், போர் பதற்றங்களுக்கு மத்தியில் அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து தரப்பினருக்கும் IAEA கோரிக்கை விடுத்துள்ளது. அணுசக்தி பேரழிவைத் தவிர்க்க சர்வதேச பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம் என ரஃபேல் க்ரோஸி வலியுறுத்தியுள்ளார்.