அபுதாபியில் ஏவுகணை மோதல் இடிபாடுகளில் சிக்கி இந்தியர் உயிரிழப்பு

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஏவுகணை போர் தீவிரமடைந்துள்ளது. அபுதாபி வான்பரப்பில் ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணையை இடைமறித்து அழித்தபோது, அதன் இடிபாடுகள் சூயைஹான் தெருவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி இந்தியர் ஒருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
இந்த போரினால் இதுவரை ஏழு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தாக்குதலில் மேலும் ஒரு இந்தியர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் பல ஏவுகணைகளை தடுத்து நிறுத்திய போதிலும், பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.