கடலில் ட்ரம்ப்பின் ‘வேட்டை’! வெனிசுலா படகு மீது மீண்டும் தாக்குதல், 3 பேர் பலி, பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் படகு மீது நடத்தப்பட்ட இரண்டாவது ராணுவத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். திங்களன்று, இந்த நடவடிக்கையை ட்ரம்ப் தானே அறிவித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்: “எச்சரிக்கை — அமெரிக்கர்களைக் கொல்லும் போதைப்பொருட்களை நீங்கள் எடுத்துச் சென்றால், உங்களை வேட்டையாடுவோம்!” இந்த தாக்குதலில் அமெரிக்கப் படையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இரண்டு வாரங்களுக்குள் இது இரண்டாவது தாக்குதல் என்பதால், அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் 2 அன்று போதைப்பொருள் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் மற்றொரு அதிவேகப் படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களை ‘கொடூரமான குற்றங்கள்’ என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ வர்ணித்துள்ளார். மேலும், அமெரிக்கா தங்கள் நாட்டில் ஆட்சியை மாற்ற முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.