ஷாப்பிங் செய்ய மொபைல் எண் கட்டாயமில்லை: அதிரடி உத்தரவு!

ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய ஷோரூம்களில் பில்லிங் செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் கேட்டு வற்புறுத்தும் நடைமுறைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனி எந்தவொரு சில்லறை விற்பனையாளரும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவரது தொலைபேசி எண்ணை சேகரிக்க முடியாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் தெளிவான வழிகாட்டுதல்
நாடாளுமன்ற மக்களவையில் இது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் பி. சந்திரசேகர், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஏற்கனவே 2023 மே 26 அன்று இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு பொருளை விற்பனை செய்வதற்கு மொபைல் எண் என்பது ஒரு ‘நிபந்தனை’ (Pre-condition) ஆக இருக்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு உள்ள உரிமைகள்
- கட்டாயமில்லை: பில் போடும்போது மொபைல் எண் தருவது வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பம். அதை கட்டாயமாக்க சட்டத்தில் இடமில்லை.
- சேவை மறுக்கப்படக்கூடாது: ஒரு வாடிக்கையாளர் தனது மொபைல் எண்ணைத் தர மறுத்தால், அவருக்குப் பொருளை விற்கவோ அல்லது சேவையை வழங்கவோ கடைக்காரர் மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
- தனியுரிமை பாதுகாப்பு: டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2025-ன் கீழ், வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாப்பது நிறுவனங்களின் பொறுப்பாகும்.
தேவையற்ற தொல்லைகளுக்கு முடிவு
பொதுவாக பில்லிங்கின் போது சேகரிக்கப்படும் மொபைல் எண்கள், பின்னர் தேவையற்ற விளம்பர அழைப்புகள் (Promotional Calls) மற்றும் குறுஞ்செய்திகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது நுகர்வோரின் தனியுரிமைக்கு (Privacy) பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், வணிக நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். இனி மால்களுக்குச் செல்லும் மக்கள் அனாவசியமான இந்த வற்புறுத்தலில் இருந்து விடுபடலாம்.