வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை? நீண்ட நாள் கனவு விரைவில் நனவாகலாம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRIs) அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இது தொடர்பான நீண்ட நாள் கோரிக்கைக்கு வெளியுறவு அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து தொடர்ந்து இந்த கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. மின்னணு வாக்கெடுப்புக்கு அமைச்சகம் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அஞ்சல் வாக்குச் சீட்டு முறைக்கு ஆட்சேபனை இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் இந்த ஒப்புதலுக்குப் பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இதுகுறித்து இறுதி முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் ஏற்கனவே அஞ்சல் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாக்களிக்கும் நீண்ட நாள் கனவு 2026 முதல் நனவாகக்கூடும்.