‘வந்தே மாதரம்’ குறித்து இன்று நாடாளுமன்றத்தில் 10 மணி நேர விவாதம் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
December 8, 2025

தேசிய பாடல் ‘வந்தே மாதரம்’-ன் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விவாதத்தை தொடங்கி வைக்கிறார். மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்தை ஆரம்பித்து வைப்பார். பாடல் உருவான வரலாறு, கலாச்சார முக்கியத்துவம் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு குறித்து மொத்தம் 10 மணி நேரம் விவாதிக்கப்படும்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி விவாதத்தில் கலந்துகொள்வார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கிறார். பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த சிறப்பு விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பரபரப்பு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.