ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை ஷேன் வார்ன் குடும்பத்திற்கு கிடைக்கிறது 460 கோடி ரூபாய்

ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் கேப்டன் ஷேன் வார்னின் தொலைநோக்கு பார்வையால் தற்போது அவரது குடும்பத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 15,300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து, வார்னின் வாரிசுகளுக்கு 460 கோடி ரூபாய் பங்காகக் கிடைக்கவுள்ளது. 2008 முதல் 2011 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வார்ன், தனது சம்பளத்துடன் அணியின் பங்குகளையும் (Equity) ஒப்பந்தம் செய்திருந்தார். ஆண்டுக்கு 0.75 சதவீத பங்கு வீதம் நான்கு ஆண்டுகளில் மொத்தம் 3 சதவீத பங்குகளை அவர் பெற்றிருந்தார். தற்போது அணி கைமாறும் வேளையில், அந்த 3 சதவீத பங்கின் மதிப்பு பல நூறு கோடிகளை எட்டியுள்ளது.
மைதானத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வார்ன் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை சாம்பியனாக்கிய அவர், மொத்தம் 55 போட்டிகளில் 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வார்ன் இன்று நம்மிடம் இல்லை என்றாலும், அன்று அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு இன்று அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை வளமாக்கியுள்ளது. ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி, சிறந்த முதலீட்டாளராகவும் வார்ன் நிரூபித்துள்ள இந்தச் செயல் விளையாட்டு உலகில் ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.