ரன்பீர் – ரோகித் உயிருக்கு மிரட்டல்: தீர்வு காண பட்னாவிஸிடம் திரைத்துறை தஞ்சம்!

ரன்பீர் – ரோகித் உயிருக்கு மிரட்டல்: தீர்வு காண பட்னாவிஸிடம் திரைத்துறை தஞ்சம்!

மும்பை: பிஷ்னோய் கும்பலின் அடுத்தடுத்த கொலை மிரட்டல்களால் பாலிவுட் திரையுலகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. நடிகர் ரன்பீர் சிங் மற்றும் இயக்குனர் ரோகித் ஷெட்டி ஆகியோர் குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த சினிமாத்துறையும் தற்போது அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

கலைஞர்கள் உயிருக்கு பயந்து படப்பிடிப்பு தளங்களை விட்டு வெளியேறினால், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையைச் சரிசெய்யவும், திரைத்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கு இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு (FWICE) இப்போது நேரடியாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தலையீட்டைக் கோரியுள்ளது.

இது தொடர்பாக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தொடர் தாக்குதல்கள் மற்றும் கொலை மிரட்டல்களால் ஃபிலிம் சிட்டியில் வேலை செய்யும் சூழல் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மற்றும் ரன்பீர் சிங்கிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல் ஆகியவை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்புகள் தடைபட்டால் பொழுதுபோக்குத் துறை முடங்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இந்த நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் வெள்ளித்திரையின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *