மேற்காசியப் போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயமா? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

மேற்காசியப் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிவாயு விநியோகச் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை முக்கியக் கூட்டத்தை நடத்துகிறார். ‘டீம் இந்தியா’ அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். போரின் தாக்கம் மற்றும் அதை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில முதல்வர்களுக்கு இக்கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்காகத் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது. முன்னதாக, இச்சூழ்நிலை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனைகள் ஏற்கனவே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.