மூன்று முறை விஷம் கொடுத்தும் சாகாத மனைவியை கூலிப்படை ஏவி கார் ஏற்றி கொன்ற கணவன்

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை விருஷாலி கவுண்டே கொல்லப்பட்ட வழக்கில் அவரது கணவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொல்ல கணவர் பிரகாஷ் மூன்று முறை உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்.
கடந்த மார்ச் 2 ஆம் தேதி விருஷாலி ஸ்கூட்டரில் சென்றபோது திட்டமிட்டபடி கார் மோதி உயிரிழந்தார். முதலில் இது விபத்து என கருதப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கார் ஓட்டுநர் மற்றும் இடைத்தரகர் சிக்கியதையடுத்து கணவரின் சதி அம்பலமானது. தற்போது கைது செய்யப்பட்ட மூவருக்கும் நீதிமன்றம் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.