முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வாகும் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி கருத்து

முஸ்லிம் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுவதாகக் கூறி 1937-ம் ஆண்டு ஷரியத் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, ஷரியத் சட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய பொது சிவில் சட்டமே சரியான தீர்வாக அமையும் என்று தெரிவித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என வாதிட்டார்.
நீதிபதி ஜோய்மால்யா பக்சி பேசுகையில், தனிநபர் சட்டங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க நாடாளுமன்றமே பொருத்தமான இடமாகும் என்றார். பலதார மணம் மற்றும் சம உரிமை தொடர்பான விவகாரங்களை வழிகாட்டு நெறிமுறைகளின்படி சட்டமியற்றும் அதிகாரிகளிடம் விடுவதே சிறந்தது என நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.