மாப்பிள்ளை ‘2-ன் வாய்ப்பாடு’ சொல்லத் தவறியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபாவில், திருமண மேடையில் நடந்த நாடகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாப்பிள்ளை ‘2-ன் வாய்ப்பாடு’ சொல்லத் தவறியதால், மணமகள் அவரைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மாலையிடும் சடங்கின்போது மாப்பிள்ளையின் வித்தியாசமான நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகமடைந்த மணமகள், அவரது அறிவாற்றலைச் சோதிக்க இந்தக் கேள்வியைக் கேட்டார். பலமுறை முயற்சித்தும் மாப்பிள்ளை வாய்ப்பாட்டை சரியாகச் சொல்ல முடியாததால், மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு, நிலைமையைச் சமாளிக்க காவல்துறை வரவழைக்கப்பட்டது.
இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காவல் நிலைய அதிகாரி வினோத் குமார் தலையிட்டு இரு தரப்பினரிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினார். பரஸ்பர ஒப்புதலின் பேரில், இரு குடும்பங்களும் திருமணத்தின்போது பரிமாறப்பட்ட அனைத்து நகைகள் மற்றும் பரிசுகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர். சமரசம் ஏற்பட்டதால், இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கல்வித் தகுதியின் காரணமாக மணமகள் எடுத்த இந்த திடீர் முடிவு தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.