போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இன்டர்போலின் மெகா வேட்டை: இந்தியா உட்பட 18 நாடுகளில் 386 பேர் கைது

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக இன்டர்போல் ஒரு பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ‘ஆபரேஷன் லயன்ஃபிஷ்-மெயாக் III’ என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ், இந்தியா உட்பட 18 நாடுகளில் 386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் நடந்த இந்த நடவடிக்கையின்போது சுமார் $6.5 பில்லியன் மதிப்புள்ள 76 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஃபென்டானில், ஹெராயின், கோகெய்ன் மற்றும் பிற போதைப்பொருட்கள் அடங்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 297 மில்லியன் மெத் மாத்திரைகள் மற்றும் 15 கோடி உயிர்களைக் கொல்லும் அளவுக்கு ஃபென்டானிலும் அடங்கும். கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை சர்போர்டுகள், காபி இயந்திரங்கள், தேநீர் பெட்டிகள் மற்றும் பூனை உணவுப் பொட்டலங்கள் போன்ற அன்றாடப் பொருட்களில் மறைத்து வைத்திருந்தனர். இதுவரையிலான மிகப் பெரிய சர்வதேச போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று இன்டர்போல் தெரிவித்துள்ளது. இந்தியாவில், ‘கெட்டாமெலன்’ என்ற டார்க்நெட் கும்பலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.