பேன் தொல்லையால் உயிரிழப்பு! பூரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பூரி, பிப்ரவரி 11: சாதாரணமாகக் கருதப்படும் பேன் தொல்லை ஒரு உயிரையே பறித்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பூரியைச் சேர்ந்த 12 வயது சிறுமி லக்ஷ்மிப்ரியா சாஹு, பேன் கடியால் ஏற்பட்ட கடுமையான தொற்றுக் காரணமாக உயிரிழந்தார்.
ஆறாம் வகுப்பு படித்து வந்த லக்ஷ்மிப்ரியா, கடந்த சில மாதங்களாகத் தலையில் அதிகப்படியான பேன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தலையில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், அவரால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. திடீரென அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, பூரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பேன் நேரடியாக மரணத்தை ஏற்படுத்தாது. ஆனால், நீண்ட நாட்களாகத் தலையைச் சொறிந்ததால் ஏற்பட்ட புண்கள் வழியாகப் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்துள்ளன. இது ‘செப்டிசீமியா’ (Septicemia) எனும் ரத்த நச்சு பாதிப்புக்கு வழிவகுத்ததே மரணத்திற்கு முக்கிய காரணம்” எனத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பூரி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அக்ஷய் சத்பதி உத்தரவிட்டுள்ளார்.