பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ் பி செந்தில் குமார் அதிரடி கைது

தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கமாண்டண்ட் செந்தில் குமார், பெண் காவலர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வேலியே பயிரை மேய்ந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.