பாகிஸ்தானில் பரபரப்பு! சிந்து தேச கோஷங்களால் கராச்சியில் கலவரம்; போலீசார் மீது கல்வீச்சு

சிந்து கலாச்சார தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 7 அன்று கராச்சியில் நடந்த பேரணி, சுதந்திர சிந்து நாட்டைக் கோரும் தீவிர போராட்டமாக மாறியது. ‘ஜியே சிந்து முத்தாஹிதா மஹஸ்’ என்ற சிந்தி தேசியவாத அமைப்பின் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பாகிஸ்தான் முர்தாபாத்’ மற்றும் ‘ஆசாதி’ (சுதந்திரம்) என்று முழக்கமிட்டனர். பேரணியின் பாதையை மாற்ற நிர்வாகம் முயன்றபோது, ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் குறைந்தது ஐந்து காவல்துறையினர் காயமடைந்தனர், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். கலவரம் தொடர்பாக 45 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கராச்சி போன்ற ஒரு பெருநகரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்படுவது, சிந்து பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் கொந்தளிப்பைக் காட்டுவதாகவும், இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.