பண்டிகை விற்பனை எச்சரிக்கை! போலி இணைப்புகளைத் தவிர்ப்பது எப்படி? கணக்கு காலியாகலாம்

பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே, Amazon Great Indian Festival மற்றும் Flipkart Big Billion Days போன்ற சிறப்பு விற்பனைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகளும் போலியான லிங்க்குகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ரூ.20,000-40,000 மதிப்புள்ள போனை வெறும் ரூ.1-க்கு வழங்குவதாகக் கூறி, இந்த மோசடி கும்பல் பயனர்களின் தகவல்களைத் திருடி, அவர்களின் வங்கிக் கணக்குகளைக் காலி செய்கிறது.
AI தொழில்நுட்பத்தின் உதவியால், இந்த மோசடி கும்பல் அசல் இணையதளங்களைப் போன்றே போலியான இணையதளங்களையும், பேமெண்ட் பக்கங்களையும் உருவாக்குகிறது. இதனால், போலிக்கும் அசல் இணையதளத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது கடினம். எனவே, தெரியாத லிங்க்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணையதளம் வழியாக மட்டுமே சலுகைகளைச் சரிபார்க்கவும். மேலும், அவசரமாக பணம் செலுத்துவதற்கு முன், இணையதளத்தின் URL-ஐ கவனமாக சரிபார்க்கவும்.