தொழிலாளர்களுக்குப் பெரும் வெற்றி! ஓவர் டைமிற்கு இரட்டிப்பு ஊதியம், கிராச்சுவிட்டி மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி; புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்

மத்திய அரசு இன்று, வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் நான்கு புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தொழிலாளர் சட்டங்களை’ அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல தசாப்த காலப் பழமையான தொழிலாளர் சட்டங்களை நவீனமயமாக்கி, தொழிலாளர்களின் பாதுகாப்பு, மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதற்கான ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 40 கோடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், உறுதிப்படுத்தப்பட்ட நியமனக் கடிதம் மற்றும் ஆண்-பெண் சம ஊதியம் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதைத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான சீர்திருத்தம் என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய சட்டங்களின் முக்கிய அம்சங்களில், ஓராண்டு சேவைக்குப் பிறகு கிராச்சுவிட்டி உறுதி, 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இலவச வருடாந்திர உடல்நலப் பரிசோதனை, அபாயகரமான பணிகளுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மிகைநேர வேலைக்கு (ஓவர் டைம்) இரட்டிப்பு ஊதியம் ஆகியவை அடங்கும். மேலும், 40 கோடி தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். பிரதமர் மோடி இந்தச் சீர்திருத்தத்தை ‘சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்களுக்கான மிகப்பெரிய நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார், இது தொழிலாளர்களுக்கு மேலும் அதிகாரமளிக்கும் என்றும் வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும் தெரிவித்தார்.