சிஆர்பிஎஃப் வீரரை அவமதித்த பெண் ஊழியர்; எச்.டி.எஃப்.சி வங்கி மீது சமூக வலைதளங்களில் சீற்றம்

ஒரு பெண் ஊழியர் சிஆர்பிஎஃப் வீரரிடம் தவறாக நடந்துகொண்ட ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, எச்.டி.எஃப்.சி வங்கி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடனை வசூலிப்பது குறித்து பேசியபோது, அந்தப் பெண் வீரரை அவமதித்து, அவரது வேலையைப் பற்றி கேலி செய்கிறார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, #BoycottHDFC மற்றும் #RespectOurJawans போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, எச்.டி.எஃப்.சி வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அந்த ஆடியோ கிளிப்பில் இருக்கும் பெண் தங்கள் வங்கி ஊழியர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆடியோவில் கேட்கும் அவமதிப்பான நடத்தை வங்கியின் மதிப்புகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனினும், சமூக வலைதளங்களில் அந்தப் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.