சவுதிக்கு அணு ஆயுத பாதுகாப்பு இல்லை பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியாவுக்கு எந்தவித அணு ஆயுத கவசமும் வழங்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கவாஜா ஆசிஃப், பாகிஸ்தான் தனது இறையாண்மையை பாதுகாக்கவே அணுசக்தியை பயன்படுத்தும் என்றும், எந்த நாட்டோடும் இதுகுறித்து எந்த ஒப்பந்தமும் செய்யாது என்றும் கூறினார். பாகிஸ்தான் தனது அணுசக்தியை சவுதி அரேபியாவுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும் என்ற ஊகங்களுக்கு அவரது அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். எந்தவொரு வெளித் தாக்குதலையும் கூட்டாக எதிர்கொள்ள பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஒன்றுபட்டு நிற்கும் என அறிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் ஒரு புதிய விவாதம் எழுந்தது. அதில் பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு அணு குண்டுகளை ‘வாடகைக்கு’ வழங்கலாம் என்று பலர் கருதினர். பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்த அறிக்கை அனைத்து வதந்திகளையும் நீக்கி, ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளது.