கௌதம் கம்பீரின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவி பறிபோகிறதா பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவி குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சமீபத்தில் பிசிசிஐ உயரதிகாரி ஒருவர் விவிஎஸ் லக்ஷ்மணனிடம் டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பமா என்று கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கம்பீர் வெற்றிகளைப் பெற்றுத் தந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதே வாரியத்தின் கவலையாக உள்ளது.
ராகுல் டிராவிட் காலத்தில் இருந்த பாதுகாப்பு உணர்வு தற்போது வீரர்களிடையே இல்லை என்றும், ஷுப்மன் கில் போன்ற முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டது அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் லக்ஷ்மண் இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதால், கம்பீர் தற்காலிகமாக நீடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை முடிவுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவது குறித்து பிசிசிஐ இறுதி முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.