கரூர் துயர சம்பவம் எதிரொலி இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி அதிரடி ஆஜர்

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். இந்த துயர நிகழ்வில் சதி இருப்பதாகக் கூறப்படும் புகார்களின் அடிப்படையில், சிபிஐ அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே தவெக தலைவர் விஜய் மற்றும் அரசு அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், தமக்கு அனுப்பப்பட்ட சம்மன் குறித்து கருத்து தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, உரிய அனுமதி பெற்றே அந்த கூட்டம் நடத்தப்பட்டதாகவும், எதன் அடிப்படையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இன்று நடைபெறும் விசாரணையில் அவர் அளிக்கப்போகும் விளக்கங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.